உள்ளடக்கத்துக்குச் செல்ல

கேள்விகள்

உடல்நல ஸ்கேன் பற்றிய கேள்வி பதில்கள்.

30 விநாடி உடல்நல ஸ்கேன் எப்படிச் செயல்படுகிறது, எதை அளவிடுகிறது, எதை அளவிடுவதில்லை, உங்கள் தனியுரிமை எப்படிப் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறியுங்கள். இது பீட்டா நிலையில் உள்ள உடல்நல மதிப்பீடு; மருத்துவச் சாதனம் அல்ல.

உடல்நல ஸ்கேன் பற்றி

Liv.Fit உடல்நல ஸ்கேன் என்றால் என்ன?

இது Liv.Fit வழங்கும் 30 விநாடி உடல்நல ஸ்கேன். உங்கள் கைப்பேசி அல்லது மடிக்கணினியின் கேமராவைப் பார்த்தால், இதயத் துடிப்பு வீதம், சுவாச வீதம், மன அழுத்த அளவு, மீட்பு நிலை போன்ற நலக் குறிகாட்டிகளை ஸ்கேன் மதிப்பிடும். இது பீட்டா நிலையில் உள்ள உடல்நல மதிப்பீடு; மருத்துவச் சாதனம் அல்ல.

இந்த ஸ்கேன் யாருக்கானது?

தங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை விரைவாகப் பார்க்க விரும்பும் 18 வயது நிரம்பிய பெரியவர்களுக்கானது. குழந்தைகளுக்கானது அல்ல. நீங்கள் கர்ப்பமாக இருந்தால், இதயத் துடிப்பின் சீரான இயக்கத்தில் பிரச்சினை இருப்பது ஏற்கெனவே தெரிந்திருந்தால் அல்லது பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருந்தால், இந்த ஸ்கேனை நம்பி முடிவெடுக்காதீர்கள்.

இதைப் பயன்படுத்த என்ன தேவை?

முன்பக்கக் கேமரா உள்ள கைப்பேசி, டேப்லெட் அல்லது கணினி தேவை. அதில் புதுப்பிக்கப்பட்ட உலாவி அல்லது Liv.Fit செயலியைப் பயன்படுத்தலாம். அணியக்கூடிய சாதனமோ வேறு சாதனமோ தேவையில்லை.

செயலியை நிறுவ வேண்டுமா அல்லது கணக்கை உருவாக்க வேண்டுமா?

இல்லை. கணக்கு இல்லாமலேயே உங்கள் உலாவியில் scan.liv.fit சென்று ஸ்கேன் செய்யலாம். Liv.Fit கணக்கை உருவாக்கினால் உங்கள் முடிவுகளைச் சேமித்து, மற்ற சாதனங்களிலும் பார்க்கலாம்.

எந்த மொழிகளில் ஸ்கேன் கிடைக்கும்?

ஆங்கிலம், அரபி, இந்தி, உருது, வங்காளம், மலையாளம், தமிழ், பாரசீகம், பிலிப்பினோ, பிரெஞ்சு, ரஷ்ய மொழி, சீன மொழி ஆகிய 12 மொழிகளில் ஸ்கேன் கிடைக்கும்.

ஸ்கேன் எப்படிச் செயல்படுகிறது?

கைப்பேசி கேமராவால் என் இதயத் துடிப்பு வீதத்தை எப்படி அறிய முடிகிறது?

ஒவ்வொரு இதயத் துடிப்பின்போதும் முகத் தோலுக்கு வழக்கத்தைவிடச் சற்று அதிகமாக இரத்தம் வருவதால் அதன் நிறம் மிக லேசாக மாறுகிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த மாற்றத்தைக் கேமராவால் பதிவு செய்ய முடியும். ஸ்கேன் அந்த மாற்றத்தை 30 விநாடிகள் கவனித்து, அதிலிருந்து உங்கள் நாடித்துடிப்பு வீதத்தைக் கணக்கிடுகிறது.

ஸ்கேன் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

வழக்கமான ஸ்கேன் நேரம் 30 விநாடிகள். 10, 45 அல்லது 60 விநாடிகளையும் தேர்வு செய்யலாம். நீண்ட நேரம் ஸ்கேன் செய்தால் இன்னும் நிலையான முடிவுகளும் சில கூடுதல் குறிகாட்டிகளும் கிடைக்கும்.

ஸ்கேன் நன்றாக அமைய என்ன செய்ய வேண்டும்?

முதலில் உட்கார்ந்து ஒரு நிமிடம் ஓய்வெடுங்கள். முகத்தில் சீராக வெளிச்சம் படும்படி ஜன்னல் அல்லது விளக்கை நோக்கி அமருங்கள். கேமராவைக் கண் உயரத்தில் வைத்துக்கொண்டு, பேசாமல் அசையாமல் இருங்கள். முடிந்தால் மூக்குக் கண்ணாடியைக் கழற்றுங்கள். நெற்றி மறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்கேன் ஏன் இடையில் நின்றது? ஏன் முடிவு எதுவும் காட்டவில்லை?

தெளிவான சமிக்ஞை கிடைக்காதபோது ஸ்கேன் இடையில் நிற்கும். அறையில் போதிய வெளிச்சம் இல்லாதது, முகம் கேமராவின் பார்வையிலிருந்து விலகுவது அல்லது கைப்பேசி அசைவது காரணமாக இருக்கலாம். நிலைமை சீரானதும் ஸ்கேன் தானாகவே தொடரும். சமிக்ஞை மிகவும் பலவீனமாக இருந்தால், ஊகத்தின் அடிப்படையில் ஒரு மதிப்பைக் காட்டுவதற்குப் பதிலாக எதையும் காட்டாது.

எல்லா சரும நிறங்களிலும் ஸ்கேன் செயல்படுமா?

அப்படிச் செயல்படும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. சரும நிறம் எதுவாக இருந்தாலும் முகத்தில் நல்ல வெளிச்சம் சீராகப் பட வேண்டும். ஸ்கேன் பீட்டா நிலையில் உள்ளது. வெவ்வேறு சரும நிறங்கள், வயதுகள், சாதனங்களில் அதன் துல்லியம் குறித்த எங்கள் சொந்த ஆய்வை இன்னும் வெளியிடவில்லை. எனவே ஒவ்வொரு முடிவையும் தோராயமான மதிப்பீடாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்கேன் எதை அளவிடுகிறது?

ஸ்கேன் எதை அளவிடுகிறது?

ஸ்கேன் மூலம் இதயத் துடிப்பு வீதம், சுவாச வீதம், மன அழுத்த அளவு, மீட்பு நிலை ஆகியவை மதிப்பிடப்படுகின்றன. இவை ஒன்றாகச் சேர்த்து உடல்நல மதிப்பெண்ணாகக் காட்டப்படுகின்றன. உயரம், எடை, வயது போன்ற விவரங்களைச் சேர்த்தால் அவற்றிலிருந்து உடலமைப்புக் குறிகாட்டிகளையும், வெளியிடப்பட்ட முறைகளின் அடிப்படையிலான இதயநல மதிப்பீடுகளையும் கணக்கிடும்.

ஸ்கேன் இரத்த அழுத்தத்தை அளவிடுமா?

இல்லை. கேமராவால் மட்டுமே இரத்த அழுத்தத்தை அளவிட முடியாது. கையில் பட்டை கட்டி அளக்கும் உங்கள் கருவியில் கிடைத்த அளவை உள்ளிட்டால், அதிலிருந்து இரத்த அழுத்தம் எவ்வளவு மாறியிருக்கலாம் என்பதற்கான பீட்டா மதிப்பீட்டை ஸ்கேன் காட்டும். உங்கள் இரத்த அழுத்தம் குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன் எப்போதும் பட்டை கொண்ட கருவியால் அளவிடுங்கள்.

ஸ்கேன் இரத்தச் சர்க்கரை, ஆக்சிஜன் அல்லது கொலஸ்ட்ரால் அளவை அளவிடுமா?

இல்லை. ஸ்கேன் இரத்தச் சர்க்கரை, இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், கொலஸ்ட்ரால் அல்லது வேறு எந்த இரத்த மதிப்பையும் அளவிடுவதில்லை.

ஸ்கேன் எந்த அளவுக்குத் துல்லியமானது?

ஸ்கேன் பீட்டா நிலையில் உள்ளது. அதன் துல்லியத்தைச் சரிபார்க்கும் பணி இன்னும் தொடர்வதால் துல்லியத்துக்கான எண்ணிக்கையை நாங்கள் வெளியிடுவதில்லை. முடிவுகள் தோராயமான உடல்நல மதிப்பீடுகளே. ஏதேனும் மதிப்பு வழக்கத்துக்கு மாறாகத் தெரிந்தால், ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுங்கள். பிறகு நல்ல வெளிச்சத்தில் அசையாமல் அமர்ந்து மீண்டும் ஸ்கேன் செய்யுங்கள்.

ஸ்கேன் ஒரு மருத்துவச் சாதனமா?

இல்லை. இது பீட்டா நிலையில் உள்ள உடல்நல மதிப்பீடு; மருத்துவச் சாதனம் அல்ல. இது எந்த உடல்நலப் பிரச்சினையையும் கண்டறியவோ, அதற்குச் சிகிச்சை அளிக்கவோ, அதைத் தடுக்கவோ செய்யாது. மருத்துவருக்கோ மருத்துவச் சாதனத்துக்கோ இது மாற்றல்ல.

ஒரு முடிவு கவலை அளித்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒரே ஒரு அளவை வைத்து அதிகம் தெரிந்துகொள்ள முடியாது. ஓய்வெடுத்த பிறகு நல்ல வெளிச்சத்தில் மீண்டும் ஸ்கேன் செய்யுங்கள். உடல்நிலை சரியில்லை என்று உணர்ந்தாலோ, முடிவு தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக இருந்தாலோ மருத்துவரைச் சந்தியுங்கள். அவசர நிலையில் உங்கள் பகுதியின் அவசர உதவி எண்ணை அழையுங்கள்.

தனியுரிமை

என் வீடியோ பதிவு செய்யப்படுகிறதா அல்லது சேமிக்கப்படுகிறதா?

இல்லை. ஸ்கேனுக்கான கணக்கீடுகள் உங்கள் சாதனத்திலேயே நடக்கின்றன. உங்கள் வீடியோவும் முகப் படங்களும் Liv.Fit நிறுவனத்துக்கோ வேறு யாருக்குமோ அனுப்பப்படுவதில்லை. அவை ஒருபோதும் சேமிக்கப்படுவதும் இல்லை.

எனது சாதனத்திலிருந்து என்ன தகவல் வெளியே செல்கிறது?

நீங்கள் தேர்வு செய்தால் மட்டுமே தகவல் வெளியே செல்லும். உங்கள் முடிவுகள் உலாவி அல்லது செயலியிலேயே இருக்கும். ‘சேமி’ என்பதை அழுத்தினால் அந்த ஸ்கேனின் எண் மதிப்புகள் உங்கள் Liv.Fit கணக்கில் சேமிக்கப்படும். ‘இந்த ஸ்கேனை அனுப்பு’ என்பதை அழுத்தினால், துல்லியத்தைச் சரிபார்க்க அந்த ஒரு ஸ்கேனின் எண் மதிப்புகளும் நாடித்துடிப்பு அலையும் எங்கள் குழுவுக்கு அனுப்பப்படும். வீடியோ ஒருபோதும் அனுப்பப்படுவதில்லை.

ஸ்கேன் என் முகத்தை அடையாளம் காணுமா?

இல்லை. ஸ்கேன் உங்களை அடையாளம் காண்பதில்லை. உங்கள் முகத்தை வேறு எந்த முகத்துடனும் ஒப்பிடுவதில்லை. உங்கள் முகத்தின் மாதிரி வடிவத்தையும் சேமித்து வைப்பதில்லை. ஸ்கேன் நடைபெறும்போது உங்கள் நெற்றியும் கன்னங்களும் எங்கு இருக்கின்றன என்பதை மட்டுமே கவனிக்கிறது.

என் தரவுகளை விற்கிறீர்களா அல்லது விளம்பரத்துக்குப் பயன்படுத்துகிறீர்களா?

இல்லை. உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் விற்பதில்லை. உங்கள் உடல்நலத் தரவுகளை விளம்பரத்துக்குப் பயன்படுத்துவதும் இல்லை.

என் தரவுகளை எப்படி நீக்குவது?

உங்கள் சாதனத்தில் உள்ள ஸ்கேன்களை scan.liv.fit தளத்தின் ‘சுயவிவரம்’ பகுதியில் நீக்கலாம். Liv.Fit கணக்கையும் அதில் சேமித்த தரவுகளையும் நீக்க, செயலியில் ‘சுயவிவரம்’, ‘தனியுரிமை’, ‘என் கணக்கை நீக்கு’ என்பதை வரிசையாகத் தேர்வு செய்யுங்கள். அல்லது app.liv.fit/delete-account என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

திட்டங்களும் கட்டணமும்

ஸ்கேன் இலவசமா?

இலவசமாகத் தொடங்கலாம். கட்டணத் தொகுப்புகளில் ஒவ்வொரு மாதமும் கூடுதல் ஸ்கேன்கள் கிடைக்கும். வாங்குவதற்கு முன் விலை எப்போதும் காட்டப்படும்.

ஸ்கேன் தொகுப்பை எப்படி ரத்து செய்வது?

iPhone செயலியில் வாங்கிய தொகுப்பை உங்கள் Apple ID சந்தா அமைப்புகளில் ரத்து செய்யலாம். Android செயலியில் வாங்கியிருந்தால் Google Play இல் ‘கட்டணங்களும் சந்தாக்களும்’ பகுதியில் ரத்து செய்யலாம். அடுத்த கட்டணம் பிடிக்கப்படாமல் இருக்க, சந்தாக் காலம் முடிவதற்கு குறைந்தது 24 மணி நேரத்துக்கு முன் ரத்து செய்யுங்கள். நீங்கள் பணம் செலுத்திய காலம் முடியும் வரை தொகுப்பைப் பயன்படுத்தலாம்.

நான் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

iPhone அல்லது Android செயலியில் வாங்கியவற்றுக்கான பணத்தைத் திருப்பி அளிப்பதை Apple அல்லது Google தங்கள் கொள்கைகளின்படி கையாளுகின்றன. விவரங்களுக்கு எங்கள் சேவை விதிமுறைகளில் பிரிவு 9-ஐப் பாருங்கள்.

பிற சேவைகள்

Liv.Fit மூலம் நான் மருத்துவரைச் சந்திக்க முடியுமா?

ஆம், உங்கள் நாட்டில் இந்தச் சேவை இருந்தால் Liv.Fit செயலியில் மருத்துவரிடம் ஆன்லைனில் ஆலோசனை பெறலாம். மருந்துகள், மருந்தகச் சேவைகள், ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் உடல்நலப் பரிசோதனைகளும் செயலியில் கிடைக்கும். பீட்டா நிலையில் உள்ள முக ஸ்கேன் உங்கள் நலனைத் தோராயமாக மதிப்பிடுகிறது. இது மருத்துவச் சாதனம் அல்ல; மருத்துவருக்கு மாற்றாகவும் அமையாது.

என் முடிவுகளை என் மருத்துவருடன் பகிர முடியுமா?

ஆம். உங்கள் ஸ்கேன் முடிவுகளை அச்சிடக்கூடிய அறிக்கையாகப் பெறலாம். அதை உங்கள் மருத்துவரிடம் காட்டலாம் அல்லது அனுப்பலாம். இவை பீட்டா நிலையில் உள்ள உடல்நல மதிப்பீடுகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உதவிக் குழுவை எப்படித் தொடர்புகொள்வது?

[email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள் அல்லது இந்த இணையதளத்தில் உள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்துங்கள்.

இன்னும் கேள்வி உள்ளதா?

எங்களுக்கு எழுதுங்கள். எங்கள் குழுவில் ஒருவர் பதிலளிப்பார்.